Living Streams
Support Us

Messages

Messages
யோனாவின் துன்பம்
தர்ச்சீஸ் என்ற பட்டிணத்தை நோக்கி பிரயாணம் ஆரம்பித்த ஒரு கப்பலில் யோனா என்ற தேவ ஊழியக் காரன் பயணம் செய்துகொண்டிருந்தான்.  ஆனால் திடீரென்று பெருங்காற்று வீசி கடலில் மிகுந்த கொந்தளிப்பு 
ஏற்பட்டதால், கப்பல் மூழ்கி விடுவதற்கான அபாயக்குறிகள் தோன்ற ஆரம் பித்தன. பெருங்காற்றிற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாதிருந்த 
சூழ்நிலையில் ஏற்பட்ட இந்த அபாய சூழ்நிலை அனைவரையும் 
அச்சப்படுத்தினது. (யோனா-1:4)
ஆனால் இந்த பெருங்காற்று எதேர்ச்சையாக  வந்ததல்ல. இது தேவனால் அனுப்பப்பட்ட ஒரு பெருங்காற்று. இந்த பெருங்காற்று அனுப்பப்பட்டதின் முக்கிய நோக்கம் யோனாவின் பயணத்தை தொந்தரவுக்குட்படுத்தி தடை செய்வதே. இந்த பெருங்காற்று யோனாவை குறி வைத்து அனுப்ப்பட்ட தினால் இதனால் பெரிதும் துன்பத்திற்குள்ளாகி துயரப்பட்டவன் யோனாவே.
ஏன் இந்த திடீர் துன்பப் பெருங்காற்று? ஏன் ஒரு மனிதனுடைய சவுகரியமான யாத்திரையை தேவன் பெருங்காற்றி அனுப்பி தொந்தரவு செய்யவேண்டும்? தேவனுடையப் பார்வையில் இது அவசியமான ஒன்று.
தேவன் இந்த துன்பக்காற்றை அனுப்பியது யோனாவை  உண்மை யிலேயே துன்பப்படுத்தவா? இல்லை. அவன் மேல் கொண்ட தேவனின் கோபமா? இல்லை. இது ஒரு தண்டனை பெருங்காற்றா? இல்லை, இது யோனாவை அழிப்பதற்காக அல்ல. ஒரு அழிவின் பாதையிலிருந்து அவனை மீட்டுக் கொள்ளவே இந்த புயல். இது தேவ கோபத்தின் பிரதிபலிப்பு அல்ல. தேவ அன்பின் புரிந்துகொள்ள முடியாத ஒரு வடிவமே இது.
யோனாவின் இந்த பயணம் தேவ சித்தத்திற்கு எதிரான பயணம். தேவ சமுகத்தை இழக்க துணிந்து, சுய உணர்வின் பாதையில் செல்லுகின்ற பயணம். இந்தப் பயணம் சுகமாக தொடரப்பட அனுமதித்தால் ஒரு தேவ ஊழியனின் எதிர்காலம் மகிமையிழந்து போகும். உன்னதமான ஒரு தேவனின் விசேஷமான பணிக்காக தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு ஊழியனின் வாழ்வினை இருள் கவ்விவிடும்.
எனவேதான் தேவன் இந்த பெருங்காற்றை அனுப்பி யோனாவின் சுகமான யாத்திரைக்கு குறுக்கீடுகளை ஏற்படுத்தினார்.
நம்முடைய சுகமான வாழ்க்கையின் பாதையில் திடீரென தடைகளும், போராட்டங்களும், கொந்தளிப்புகளும் ஏற்படும்போது நாம் திக்குமுக்காடி விடுகிறோம். ஏன் இந்த எதிர்பாராத தோல்வி? ஏன் இந்த திடீர் தொல்லைகள்ஈ ஏன் இந்த எதிர்பாராத துன்பங்கள்? என மனக்கஷ்டம் அடைகிறோம்.
துன்பங்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் அது வேதனையானதே. அவைகளை யாரும் விரும்பி வரவேற்க முடியாது. ஆனால் நமக்கெதிராக வருகின்ற சில துன்பங்கள் உண்மையில் நமக்கு எதிரானவை அல்ல. சில துன்பங்கள் தேவனுடைய பார்வையில் நமக்கு ஆதரவானவையே. ஆனால் அவைகளை துன்புற்ற மனநிலையில் புரிந்துகொள்வது கடினம். அதனைப் புரிந்துகொள்ள சிலநேரம் கொஞ்ச காலமும், சில நேரம் அதிக காலமும் தேவைப்படும்.
யோனா தான் விரும்பிய பாதையில் சவுகரியமாக சென்றுக் கொண்டிருந்த போது, முழுக் கப்பலையும் அபாயத்திற்கு நேரகாத் தள்ளிய அந்த பெருங்காற்று தனக்கு ஆதரவானது என நம்புவதற்கு எந்த 
அடையாளங்களும், காரணங்களும் இல்லை. ஆனால் ஒரு நாள் அவன் அந்த பெருங்காற்றை வரவிட்ட தேவனுக்கு நன்றி கூறியிருப்பான். அது மட்டும் வராதிருந்திருந்தால் யோனாவின் வாழ்க்கை அவனுடைய சுயசித்தத்தின் பாதையிலே எங்கோ போய் சிறப்பிழந்து சீர்கெட்டு போயிருக்கும்.
அன்பும், பெருங்காற்றும்
தேவ அன்பு என்பது நில நேரங்களில் அவரை விசுவாசித்து வாழ் கின்றவர்களின் வாழ்க்கையில் தென்றலின் வடிவத்தில் வீசும். அப்போது நாம் நம்மையும், நம்முடைய வாழ்க்கை சூழ்நிலைகளையும் சுகமாக உணர முடியும். அவர் தட்டிக் கொடுத்து, தாங்கி நடத்தி, ஊக்குவித்து, உற்சாகப் படுத்தி நடத்துவார். அப்பொழுது அவரது அன்பை நமது உள்ளம் ருசித்து அவருக்கு நன்றி நன்றி எனக் கூறும்.
ஆனால் சில  நேரங்களில் அதே அன்பு பெருங்காற்றாக வீசி நமக்கு எதிராக சில காரியங்களை நிகழ வைக்கும். அங்கே யோனா சென்ற கப்பல் சந்தித்தது போன்ற கொந்தளிப்புகளும், பயத்திற்கும், பீதிக்கும் ஏதுவான சூழ் நிலைகளும் தோன்றும்.
அது எப்படி பெருங்காற்றும், கொந்தளிப்பும், பயமும், பீதியும், 
சோதனைகளும் தேவ அன்பின் விளைவாக வரமுடியும்? என்ற கேள்வி எழுவது இயற்கையானதே. தகப்பன் சாதாரண சூழ்நிலைகளில் தன்னுடைய மகனை பல விதங்களில் சந்தோஷப்படுத்துகிறான். அவனை  தூக்கி சுமந்து கொண் டாடுகிறான். கேட்டதை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியாக்குகிறான். இது தகப்பனுடைய அன்பு தென்றலாக வீசுகின்ற அனுபவம்.
ஆனால் அந்த மகன் ஒரு தவறைச் செய்யும்போதும், கீழ்ப்படியாமல் போகும் போதும், அதே தகப்பன் கடுமையாக நடந்து கொள்கிறான். கோப வார்த்தைகளைப் பேசுகிறான். கடின வார்த்தைகளால் கண்டிக்கிறான். சில நேரங்களில் தண்டிக்கவும் செய்கிறான். இது தான் பெருங்காற்றின் அனுபவம். எதற்காக இந்த பெருங்காற்று? இதுவும் தகப்பனுடைய அன்பின் இன்னொரு பகுதிதான்.
மகன் தவறாகப் போகக் கூடாது. தவறான சுபாவங்களைக் கொண்டிருக்கக் கூடாது. அவன் ஆகாதவனாய் மாறிவிடக் கூடாது என்ற உயர்ந்த கரிசனையின் விளைவுதான் இந்த கடின வார்த்தைகளும், எச்சரிப்புகளும், தண்டனைகளும், மகனைப் போகிற பாதையில் போகவிட்டால் அவனு டைய எதிர்காலம் வீணாகிவிடும் என்ற வாஞ்சையே தகப்பனை பெருங் காற்றுபோல கடினமாக நடந்துக் கொள்ளத் தூண்டியது.
யோனாவிற்கு எதிராக தேவன் அனுப்பிய பெருங்காற்றாகிய துன்பம் உண்மையில் அவனை உருவழிக்க அல்ல, அவனை உருவாக்கவே அது. பெருங்காற்றினால் யோனாவை தண்டிப்பது தேவதிட்டம் அல்ல. அவனை மீண்டும் தம்முடைய ஊழியனாக நிலை நிறுத்தவும், அதிகக் கேடானவைகள் தோன்றி அவனை அலைக்கழிக்காமலும் இருக்கவே.
அதிகக் கேடானதை தடுத்திட
யோனாவிற்கு எதிராக கடல் கொந்தளிப்பு, கப்பலிலிருந்து அவன் தூக்கி வீசப்படுதல், மீனின் வயிற்றில் நிர்ப்பந்தமாய் இருக்க தேர்தல் ஆகிய யாவும் வேதனையும் சோதனையுமான காரியங்களே. அவைகளால் யோனா மிகவும் பாதிக்கப்பட்டான்.
ஆனால் தேவனுடைய பார்வையில் அது அவசியமாயிருந்தது. இவ்விதம் சில கஷ்டங்களை அவனுக்கு அனுமதிக்காதிருந்தால் யோனா தன்னுடைய சுயமதியின் பாதையில்  போய் இவைகளைவிட அதிகமான வேதனைகளை யும், சீர்கேடுகளையும் சந்திக்க நேரிட்டிருக்கும்.
சரீரத்தில் ஒரு வியாதி என மருத்துவரிடம் சென்றால், அவர் மாத்திரை மருந்துகளைத் தருவதோடு, அறுவை சிகிட்சையும் செய்யச் சொல்கின்றார். இவை சிரமமானவைகள்தான். மிகுந்த சரீர வேதனைகளையும், பண இழப்புகளையும் ஏற்படுத்துவதுதான். ஆனால் இவைகளைக் குறித்து ஒரு டாக்டர் ஆலோசனை தரும்போது நாம் அவைகளை ஏற்கின்றோம் எதற்காக? இந்த சிரமங்களையும், கடினமான வேதனைகளையும் நாம் சந்திக்கா விட்டால் சரீரத்தின் வியாதி நமக்கு இதைவிட பன்மடங்கான கஷ்டங்களைத் தரும். இந்த சிரமங்களை ஏற்பதினால் பின்னர் பலவித உடல் கஷ்டங்களை தவிர்க்கும் வழி ஏற்படுகிறது.
இன்று நாம் அனுபவிக்க நேரிடுகின்ற சில கஷ்டங்களும், போராட்டங் களும் நமக்கு கசப்பானவையாகவே இருக்கும். ஆனால் இவைகளை 
அனுபவிக்க தேவன் நம்மை அனுமதிக்காவிடில் நாளை நம்முடைய முழு வாழ்க்கையும் கசப்பாக மாறிவிட வாய்ப்பு உண்டு.
பல நேரங்களில் நம்முடைய சுயம் சார்ந்த முடிவுகளின் பாதைகளுக்கு எதிராக தேவன் தரும் எச்சரிக்கைகளை, சீர்திருத்த வார்த்தைகளை நாம் ஏற்பதில்லை. எனவே சில பெருங்காற்றுகளை அனுப்பவேண்டிய கட்டாயம் தேவனுக்கு நேரிடுகிறது. சில துன்பங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள் ஆகியவை மூலமாகத்தான் நம்முடைய சுய உணர்வுகள் சார்ந்த தவறான பிரயாணங்களை தேவன் தடுக்க முடிகிறது.
வாயினால் சொல்லப்படும் வார்த்தைகளையும், கண்டிப்புகளையும் கடந்து போய் பிள்ளைகள் தவறுகளைச் செய்யத் துணியும்போது, பெற்றோர் பிரம்பை கையாள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது. அதுபோல் தேவ னுடைய ஆலோசனைகளையும், வழி நடத்துதல்களையும் மீறி நாம் விரும்பிய பாதையில் தொடரும்போது தேவன் சில கஷ்டங்களை அனும திப்பதின் மூலமாகத்தான் நம்மை அவருடைய திசைக்கு நேராகக் கொண்டு வர முடிகிறது.
யோனாவை தேவன் நினிவேக்கு போகச்சொன்னார்.  அவன் அதை விரும்பவில்லை. எனவே அவன் தேவ சமுகத்தை விட்டு வெளியேறி தர்ச்சீஸ் என்ற இடத்தை நோக்கிப் பிரயாணம் செய்தான்.
நினிவே பாதை அன்பின் பாதை. அது கரிசனையின் பாதை. அது மன்னிப்பின் பாதை. அது பொறுத்துக்கொள்தலின் பாதை. அது சகிப்புத் தன்மையின் பாதை. அது பகைத்தோரையும் நேசிக்க அழைக்கும் போதை.
நினிவே மக்கள் மகாபாவிகள். அக்கிரம சிந்தைக்காரர்கள். நல்லதை மதிக்கத் தெரியாதவர்கள். இஸ்ரவேலர்களுக்கு மிகுந்த தொல்லைகள் கொடுத்தவர்கள். இப்பொழுது அவர்கள் மேல் தேவ கோபம் வந்துள்ளது. தேவன் அவர்கள் மேல் பெரிய தண்டனையை விதித்துள்ளார். 
ஆயினும் தேவ கோபமும், தேவத் தண்டனையும் அவர்கள் மேல் நிறைவேறி அவர்கள் அழியவேண்டும் என்பது தேவனின் விருப்பம் அல்ல. அவர் அவர்களை உண்மையில் இரட்சிக்க விரும்புகிறார். அதற்காகவே யோனாவை நினிவேக்கு போகச்சொன்னார். அதற்காகவே நினிவேக்கு யோனா போய் அவர்கள் மேல் வந்துள்ள தண்டனையினைக் கூறி எச்சரிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். அந்த எச்சரிக்கை செய்தியைக் கேட்டு ஒரு வேளை அவர்கள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டு மனந்திரும்பி, தேவ கிருபையைத் தேடுவார்கள் என்பதே தேவனின் சிந்தை.
அன்பின் பாதையை வெறுத்து
ஆனால்  யோனாவின் மனநிலை தேவ உணர்விற்கு எதிராக இருந்தது. அவன் தேவனுடைய அன்பை, கரிசனையை, மன்னிப்பை, கிருபையை அவர்கள் பெறுவதை விரும்பவில்லை.
எனவே நினிவே என்ற அன்பின் பாதையை, தேவக் கரிசனையின் பாதையை, மன்னிப்பின் பாதையை, தேவ கிருபையின் பாதையை அவன் வெறுத்து, தான் விரும்பிய விதமாக செயல்படுவதற்கு ஏற்ற ஒரு பாதையை தெரிந்துகொண்டான். அதுதான் தர்ச்சீசின் பாதை.
தர்ச்சீசை நோக்கிய பயணம் சுயம் சார்ந்தது. தேவனுடைய சமுகத்தை இழந்தது. கீழ்ப்படியாமையை அடித்தளமாகக் கொண்டது. அந்தப் பாதை தேவனுடைய சித்தத்தை மதியாமல் சுயத்தின் எண்ணங்களை மதித்து ஆரம்பமானது. அந்த பாதை ஆசீர்வாதமாக இராது. தேவ சித்தத்திற்கு எதிராக துணிகரமான கீழ்படியாமையின் யாத்திரையின் முடிவு அழிவாகவே இருக்கும். அது துவக்கத்தில் தெரியாது. போகப் போகத்தான் புரியும்.
எனவே தேவன் அவனுடைய தவறானப் பாதையிலிருந்து அவனை திருப்பி சரியானப் பாதைக்கு கொண்டுவர விரும்பினார். சுய சித்தத்தின் அழிவுக்கேதுவான பாதையில் நெடுகப்போய் தன்னை பாழாக்கிக் கொள் ளாமலிருக்கும்படி, மறுபடியும் அவனைத் தம்முடைய சித்தத்தின் பாதைக்குக் கொண்டு வர விரும்பினார்.
அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தேவன் கையாண்ட வழிதான் யோனாவின் பிரயாணத்திற்கு குறுக்கீடு செய்யும் பெருங்காற்று.
அநேகர் தங்கள் வாழ்க்கையில் வந்துள்ள துன்பங்களின் காரணங்களை யோசித்துப் பார்ப்பதில்லை. யோசித்துப் பார்த்தல் அதனைக் கண்டறிய முடியும். பெருங்காற்றினால் ஏற்பட்ட கொந்தளிப்பையும், கப்பற் சேதத்திற் கேதுவான அபாய நிலையையும் கண்ட யோனா அதனுடைய காரணத்தை உடனே புரிந்துகொண்டான். தான் தேவனுடைய சிந்தைக்கு எதிராக, அவரு டைய கட்டளைகளை புறக்கணித்து சுயம் சார்ந்த வழியில் பயணித்துக் கொண்டிருப்பதால் இந்த சோதனை வந்தது என்பதை அவனால் உணர முடிந்தது. (யோனா -1:12)
சிலர் தாங்கள் கொடிய பாவம் எதுவும் புரியாததாலும், மிக மிக அக்கிரம மான காரியங்கள் செய்யாததாலும், தங்களுக்கு நேர்ந்த கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் எந்த விசேஷ காரணங்களும் இல்லை என நினைக்கின் றனர். அவர்கள் துன்பங்கள், நெருக்கடிகள், மனவியாகுலத்திற்கேதுவான காரியங்கள் ஏற்படும்போது கநான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன், யாருக்கு என்ன அநியாயம் செய்தேன்க என்ற கேள்விகளையேக் கேட்பார்கள்.
ஆனால் யோபுவுக்கு வந்த சோதனைகளும், நெருக்கடிகளும் எதற்காக? அவன் யாருக்கும் எந்தத் தீங்கும், தீவினையும் செய்யவில்லை. அவன் யாரையும் ஏமாற்றவோ, வஞ்சிக்கவோ இல்லை. ஆனால் அவன் மிகப்பெரிய கொந்தளிப்பான சூழ்நிலையைக் காண நேரிட்டது.
அவன் செய்த தவறு என்ன? தேவசித்தம் செய்யத் தவறினான். தேவ சித்தம்  அவனுடைய விஷயத்தில் எதுவாகயிருந்தது? அவன் நினிவே மக்கள் தேவ அன்பை, மன்னிப்பை, கிருபையை, ஆசீர்வாதத்தை அடைவதற் கேற்ற விதமாக நினிவேக்கு சென்று தேவன் சொன்னபடி செயல்பட வேண்டும். அதற்குத்தான் அவன் உடன்படவில்லை.
தோல்விகளின் காரணம்
சிலர் தங்கள் வியாபாரம் பலவீனமடையும்போதும், செய்வதில் எல்லாம் தோல்வியைக் காணும் போதும் எந்த வேலையிலும் ஸ்திரமாய் இருக்க முடியாமல் போகும் போதும் கநான் கர்த்தருக்கு ஊழியம் செய்ய போயி ருக்கவேண்டும், அதை செய்யாததால்தான் கர்த்தர் எதைச் செய்தாலும் அடித்துக் கொண்டேயிருக்கிறார்க என்று சொல்வார்கள். கர்த்தருடைய பணிக் காகப் போகாததே தோல்விகளுக்கு காரணம் என நிதானிப்பார்கள்.
ஆனால் இது அவ்வளவு சரியான காரணமாக பெரும்பாலும் இருப்ப தில்லை. ஊழியம் செய்தால் எல்லா வெற்றியாயிருக்கும், இல்லையேல் எல்லாம் தோல்வியாயிருக்கும் என்று எல்லா நேரங்களிலும் கூற முடியாது.
நாம் அன்பானவர்களாக, பிறர் மேல் அக்கறை கொண்டவர்களாக, பிறருடைய தீமைகளை சகித்துக் கொள்கின்றவர்களாக, பிறரை மன்னிக்கும் மனநிலையை உடையவர்களாக வாழவேண்டும். இவைகள் கர்த்தருக்கு நம் வாழ்வின் மேல் உள்ள முக்கியமான சித்தங்கள்.
அன்பின் சிந்தையில்லாமல், மன்னிப்பின் சிந்தையில்லாமல், சகிக்கும் சிந்தையில்லாமல், பிறர் வாழவேண்டும் என்ற கரிசனையின் சிந்தையில் லாமல் நம்முடைய சுய உணர்வுகளையும், பிரியங்களையும், எண்ணங்க ளையும் மன நிலைகளையும் முக்கியப்படுத்தி அதற்கேற்ற விதமான ஒரு முரண்பாட்டின் சிந்தையோடு செயல்பட்டால் அதுதான் தேவ சித்த்திற் கெதிரான செயல்பாட்டின் வாழ்க்கை.
இத்தகைய ஒரு வாழ்க்கைப் பாதை தேவனுக்கு விரோதமானது. அவரு டைய நோக்கங்களுக்கு எதிரானது. அவருடைய கொள்கைகளுக்கு புறம் பானது. அவருடைய பரிசுத்த அன்பின் உணர்வுகளுக்கு அவமரியாதை செய்பவை. இந்தப் பாதை கேட்டுக் கேதுவானது. தேவ சமுகத்தை இழந்து தான் இந்தப்பாதை வழியாக பயணம் செய்ய முடியும் இது பிலேயாமின் பாதையைப் போல தேவனை கோபப்படுத்துவது. இது சவுலின் பாதையை போல முரட்டாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது. இந்தப் பாதையில் கொடிய வேதனைகளையும், சஞ்சலங்களையுமே விளைவாகக் காண முடியும்.
இப்படிப்பட்ட பாதையில் நாம் பயணிப்பதால் யோனாவிற்கு எதிராக பெருங்காற்றை அனுப்பி கப்பலை உலுக்கிய தேவன், நம் வாழ்க்கையையும் உலுக்க முடியும். சில துன்பங்களை அனுப்பி நாம் நம்மை ஆராய்ந்து பார்த்து சீர் செய்வதற்கு வழி ஏற்படுத்தியிருக்க முடியும். எனவே யாருக்கு என்ன தீங்கு செய்தேன்? யாருக்கு என்ன அக்கிரமம் செய்தேன்? எனக் கேட்காமல் யாருக்கு அன்பை காண்பிக்க தேவனால் ஏவப்பட்டும், நான் அதைச் செய்யாமல், வெறுப்புணர்வுடன் வாழ்ந்தேன்? யாரை மன்னிக்க தேவனால் ஏவப்பட்டும் மன்னிக்க மனமற்றவனாய் வீம்பு பாராட்டினேன்? யாருடைய குறையை சகித்துக்கொள்ள தேவனால் உணர்த்தப்பட்டும், பழிக்கு பழி மேல் நம்பிக்கை வைத்தேன்? என்ற விதமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
யார் மேலோ கோபத்தையும், வெறுப்பையும் விரோதத்தையும், கசப்பையும், வைராக்கியத்தையும், பொறாமையையும் வைத்துக்கொண்டு நாம் வாழ்வோமானால் நம்முடைய வாழ்க்கைப் படகு தேவனால் அனுப்பப்படும் பெருங்காற்றுகளால் அசைக்கப்பட வாய்ப்புண்டு. மனதில் கோபமும், கசப்பும், எரிச்சலும் வெறுப்பும் தடையின்றி வளருவதற்கு இடம் தரப்படும் போது, நம்முடைய பயணங்கள் தடைபட முடியும். நம்முடைய முயற்சிகள் தோல்வியடைய முடியும். நம்முடைய எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாற முடியும். இவைகளுக்கு பின்னால் தேவனுடைய கரம் காரணமாக இருக்க முடியும்.
இவைகள் தேவனுடைய தண்டனைகள் அல்ல. நம்மை சோதித்துப் பார்த்து சரிசெய்ய வேண்டியதை உணரும் வாய்ப்புகள். இவைகள் தேவ னுடைய கோபத்தின் விளைவுகள் அல்ல. அவர் தம்முடைய அன்பையும் கரிசனையையும் வெளிப்படுத்தும் வித்தியாசமான முறைகள். இங்கே தேவனுடைய நோக்கம் நம்மை விசனப்படுத்துவது அல்ல. தவறான குணநிலைகளினாலும், மன நிலைகளினாலும் சுயத்தை உயர்த்திப் பிடிக்கும் சிந்தைகளினாலும் தேவ சித்தத்தை மீறிச் செயல்படும் வாழ்க்கையால் வருகின்ற பெரிய தீங்குகளுக்கு தடை ஏற்படுத்துவதே தேவநோக்கம். ஒரு சலசலப்பை அனுமதித்து அதன் மூலம் நம்மை உணர்த்தி, ஒரு பெரிய தீங்கான சலசலப்பு ஏற்படாமலிருக்க வழி ஏற்படுத்துவதே தேவனுடைய உண்மையான குறிக்கோள்.
சுய சித்த்தின் பாதையில் பயணம் செய்து ஒரு பெரிய கேட்டுக் கேதுவான சூழ்நிலையை சந்திக்கும் முன்பு, பெருங்காற்றை அனுப்பி, யோனா 
தம்முடைய சித்தத்தின் பாதைக்கு திரும்புவதற்கான ஒரு மகிமையான வாய்ப்பை தேவன் யோனாவுக்கு அளித்தார்.
அவர்களுக்கு ஏன் பாதிப்பில்லை
சில நேரங்களில் தேவனை அறிந்தவர்கள் செய்ய நேரிடும் சிறு சிறு தவறுகளுக்கும் பிரதிவிளைவாக பலவித கஷ்டங்களை சந்திக்க நேரிடு கிறது. சில சோதனையான சூழ்நிலைகளின் நடுவில் தேவனுடைய வார்த் தைகளின் படி செயல்படாமல் போய் விடுகிற வேளையில், சில கஷ்டங் களும், வேதனைகளும் கூடவே வந்து விடுகிறது.
அதே வேளையில் சிலர் இவைகளை விட எவ்வளவோ பெரிய தவறுகளையெல்லாம் செய்கின்றார்களே. ஆனால் அவர்கள் அவ்விதம் கஷ்டப்பட நேரிடவில்லையே. திட்டமிட்டு தவறு செய்கின்றவர்களையும், வேண்டுமென்றே தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிராக செயல்பட தங்களை ஆயத்தமாக்கிக் கொண்டவர்களையும் தேவன் கண்டு கொள்ளா தது போல இருக்கிறாரே. இவ்விதமாக சிலர் சிந்திப்பதுண்டு.
ஒரு தேவ உழியர் இவ்விதமாக புலம்பினார். கநான் சின்ன சின்ன விஷயங்களில் தவறினால் கூட தேவனால் கண்டிக்கப்படுவதை எனக்குள் உணர்கின்றேன். என்னுடைய சின்ன சின்ன கீழ்ப்படியாமைகளும், முரண்பாடான செயல்பாடுகளும் எனக்கு அதற்கேற்ற பாதிப்புகளை உடனுக்குடன் கொண்டு வருவதை உணர்கின்றேன். அதே வேளையில் எத்தனையோ தேவ ஊழியர்கள் எத்தனையே ஆண்டுகளாக வேண்டு மென்றே கர்த்தருடைய ஊழியத்தில் மிகவும் முரண்பாடாக நடந்தும், கர்த்தருடைய நாமத்தை சுயலாபத்திற்காக திட்டமிட்டு தவறாக உபயோ கித்தும் அவர்கள் தங்கு தடையில்லாத உயர்வுகளைக் காண் கின்றார்களே. அவர்கள் நினைத்ததெல்லாம் எளிதாக நிறைவேறுகிறதே. இதன் காரணம் என்ன?
இது வேறொன்றுமில்லை. தேவன் அவர்களை கை கழுவி விட்டார். அவர்கள் போக்கில் போகவிட்டு விட்டார். அவர்களுக்கு எதிராக அவர் பெருங்காற்றுகளை அனுப்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் தேவ 
சித்தத்திற்கு எதிராக செயல்படும் நிலையில் தங்களை உறுதிப்படுத்திக் 
கொண்டார்கள். தேவசித்தம் சார்ந்த வாழ்க்கை தாங்கள் எதிர்பார்க்கின்ற விதமான நன்மைகளை எதிர்பார்க்கும் அளவிற்கு தராது என நம்பி, சுய சித்தத்தின்படி வாழ்ந்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வலிமையான முடிவுகளை அவர்கள் எடுத்துவிட்டார்கள்.
தள்ளுபடியான வெள்ளி
தங்கள் சுய சித்தத்தின் பாதைகளை விட்டு விலகி வர தேவன் கொடுத்த அழைப்புகளையெல்லாம் அவர்கள் அவமதித்து விட்டார்கள். தம்முடைய சித்தத்தின் பாதையில் அவர்களைக் கொண்டு வரும்படி தேவன் கொடுத்த எச்சரிப்புகளை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. தவறுகளை விட்டு வெளியே வருவதற்கு தேவன் திரும்பவும், திரும்பவுமாகக் கொடுத்த கிருபையின் வாய்ப்புகளை அவர்கள் வீணடித்து விட்டார்கள். எனவே தேவன் அவர்களின் கடின இருதயத்தின்படியே செயல்பட அவர்களை விட்டுவிட்டார். தேவனுடையப் பார்வையில் அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள். அவர்களை புடமிடுகிற தேவனுடைய பிரயாசம் விருதாவாய் போயிற்று. அவர்கள் தள்ளுபடியான வெள்ளிகள். கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார். (எரேமியா - 6:28-30)
ஆனால் இது மிகவும் மோசமான நிலை. இவர்கள் எந்த நேரத்தில் எந்தக்  கல்லில் இடறி விழுவார்கள் எனக் கூற முடியாது.
யோனாவை தேவன் நேசித்தார். அவன் முரட்டாட்டவாதி அல்ல. அவன் தேவ சித்தத்தை வேண்டுமென்றே அவமதிக்கிறவனல்ல.  அவன் சுய உணர் வுகளை மேற்கொள்வதில் சற்று பலவீனமாக இருந்தான். அவன் தேவ உணர்வுகளை புரிந்துகொண்டு செயல்படும் விஷயத்தில் போதிய பக்குவ நிலை அடையாதவனாயிருக்கின்றான். அவனை அவன் போக்கில் விட்டு விட தேவன் விரும்பவில்லை. இந்நாள் வரை தமக்கு கீழ்ப்படிவுடன் செயல்பட்ட தன்னுடைய ஊழியக்காரன் அற்ப நேரம் தொடரும் பலவீன மான நிலைகளுக்காக, ஒரு உன்னத வாய்ப்பை இழந்து போய்விடக் கூடாது என்று தேவன் எண்ணினார். ஒரு பெருங்காற்றை அனுப்பியாவது, அவனை தமது சித்தத்தின் பாதைக்கு திருப்பவேண்டும் என்று முடிவு செய்தார். எனவே பெருங்காற்று யோனாவின் பாதையில் குறுக்கிட்டது.
ஆம். அவர் யாரை நேசிக்கிறாரோ, யார் மேல் கரிசனையாயிருக்கிறாரோ அவர்களை அவர் இரட்சிக்க தயங்குவதில்லை. (எபி-12:6) ஏனென்றால் அவர்கள் கெட்டுப் போவது அவருடைய சித்தமல்ல. அன்பானவர்களே யோனாவை பாதித்தது போன்ற பெருங்காற்று ஏதாவது ஒரு துன்பமான வடிவத்தில் உங்கள் வாழ்க்கையிலும் வந்திருக்கலாம். உங்களின் இதயம் விரும்பிய பயணம் அதனால் தடைகளைக் கண்டிருக்கலாம். ஆனால் கலங்காதிருங்கள். உங்கள் பயணம் தேவ சித்தம் சார்ந்தது தானா என்பதை யோசித்துப் பாருங்கள். இது உங்களை தேவ சித்தத்தின் பாதையில் பூரணமாக திருப்பிட தேவன் அனுமதித்ததாக இருக்கலாம். ஏனென்றால் உங்களை கர்த்தர் நேசிக்கின்ற õர். 
 


No. 126, Muthiya Muthaliar Street, Muthialpet, Pondicherry, 605003. India
Mail: jeevaneerodai@gmail.com | Phone: +91 - 0413 - 223 6042
Copyright © 2019. Living Streams